இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – முதல் பார்வை

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - முதல் பார்வை

வேறுபட்ட, நிறைவான திரையனுபவம். தீவிரமான கருப்பொருள்களை கதையின் அடித்தளமாக கொண்டிருந்தாலும் கலை வடிவமாக அதியன் ஆதிரை வார்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். போர்-ஆயுத அரசியல், முதலாளித்துவத்தின் சுரண்டல், சாதிய வன்மம் என்று மூன்று புள்ளிகளை லாரி ஓட்டுநராக வரும் தினேஷ், ஒரு குண்டு ஆகியவற்றின் மூலம் கச்சிதமாக நெய்திருக்கிறார் இயக்குனர்.

தேன்மாவின் இசை இதனை இன்னமும் உச்சத்திற்கு தூக்கி நிறுத்தியிருக்கிறது. முனிஸ்கான் எப்படி இப்படி பதற்றப்பொழுதிலும் பட்டாசாய் புன்னகைக்க வைக்கிறார் என்பதை அனுபவியுங்கள்.முதலாளித்துவம் எப்படி முறைசாரா தொழிலாளர்களை கசக்கிப் பிழிகிறது என்பதை முனைப்பான திரைக்கதை கண்முன் பரப்புகிறது. நாட்டார் நிகழ்த்துக்கலையும், சனாதன சுவர்களை புறந்தள்ளி நாயகி வெளியேறும் கணமும் பிணைக்கப்பட்டது அழகியல்.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - முதல் பார்வை

கலைக்கான பொறுப்புணர்வை உள்வாங்கிய இப்படைப்பு சற்றும் சலிப்பைத் தரவில்லை. நிறைந்திருந்த அரங்கமும், முடிந்தபின்பும் நீண்ட உரையாடல்களும் அதனையே உறுதிப்படுத்தின. நகைச்சுவை அரிதாரம், போர்ப்பரணி பூண்டு உடன்போக்கு கதையொன்றினை ரசிக்க வைக்கும் வகையில் சொன்ன ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரையில் தவறவிடக்கூடாத படைப்பு. மாவளி தீச்சுடர்கள் போல விழி ஒளிர வெளியே வருவீர்கள்.


You may also like...

Leave a Reply